செய்திகள்

‘குட்கா’ விற்பனையை அனுமதிக்க அமைச்சர் - அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம்

Published On 2017-06-27 06:39 GMT   |   Update On 2017-06-27 06:40 GMT
‘குட்கா’ விற்பனையை அனுமதிக்க அமைச்சர், அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சமாக பெற்றது வருமான வரி சோதனையில் அம்பலமாகி உள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் தமிழ்நாடு முழுவதும் சிறு கடைகளில் ரகசியமாக குட்கா, பான் மசாலா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு குட்கா விற்பனை அதிகரித்தது. இதுபற்றி பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கும், வருமான வரித்துறையினருக்கும் புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து உளவுத்துறையும் சென்னையில் குட்கா விற்பனை பற்றிய தகவல்களை திரட்டி கொடுத்தது.

அதன் பேரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல நிறுவனங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு நிறுவனத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்பாக நிறைய ஆவணங்கள் சிக்கின.

அந்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறி இருப்பது தெரிய வந்தது. தடையை மீறி குட்காவை விற்பதற்கு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது அந்த ஆவணங்கள் மூலம் உறுதியானது.

இதையடுத்து குட்கா உற்பத்தி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவரது வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் மாதவராவ் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது உறுதியானதால் மாதவராவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். அதில், அவர் கூறியதாவது:-

குட்காவை தடையை மீறி விற்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றனர்.

போலீஸ் இணை கமி‌ஷனர், செங்குன்றம் உதவி கமி‌ஷனருக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்பட்டது. 2015-16ம் ஆண்டு மட்டும் அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாதவராவ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

குட்கா விற்பனையை அனுமதிக்க லஞ்சம் பெற்றதில் முக்கியமானவர்களுக்கு தொடர்பு இருந்ததால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதியது.



ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. என்றாலும் வருமான வரித்துறை சார்பில் இந்த வி‌ஷயத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், “குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க அனுமதிப்பதற்கு லஞ்சம் பெற்றதில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது. இதுபற்றி தனி கமி‌ஷன் அமைத்து விசாரித்தால் உண்மை தெரிய வரும்” என்று கூறி இருந்தார்.

ஜார்ஜின் கடிதத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குனரகத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். பிறகு அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

குட்கா விற்பனைக்கு அனுமதித்தவர்கள் யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. வருமான வரித்துறையினரிடம் இருந்து ஆவணங்களை பெற்ற ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் குட்கா விற்பனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல லஞ்சம் வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் யார்-யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குட்கா நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தும் ரூ.40 கோடி லஞ்சம் கை மாறியதற்கு ஆதாரமாக உள்ளன. என்றாலும் தமிழக அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

அரசு அனுமதித்தால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதனால் வருமான வரித்துறையினர் அம்பலப்படுத்திய ரூ.40 கோடி லஞ்ச விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News