இந்தியா

ஜார்கண்ட்டில் அமைச்சரின் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.30 கோடி சிக்கியது

Published On 2024-05-06 04:51 GMT   |   Update On 2024-05-06 06:06 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
  • வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேட்சை தலைவர்கள் தங்களது பினாமிகள் மூலம் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராஞ்சியில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அலம்கீர் ஆலனின் நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அமைச்சரின் தனிச்செயலாளர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் முற்று கையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அமைச்சரின் செயலாளர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த பணக்கட்டுகள் அனைத்தும் 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன.

இதையடுத்து அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்களை வரவழைத்தனர். வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த பணக்கட்டுகளை எந்திரம் உதவியுடன் எண்ணினார்கள்.

அதில் 20 கோடி ரூபாய் அளவுக்கு கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைச்சரின் மற்றொரு வீட்டிலும் பணக்குவியல் இருந்தது. அங்கு பணத்தை எண்ணி வருகிறார்கள். அங்கு ரூ.10 கோடி அளவிற்கு பணம் சிக்கியதாக தெரியவந்தது.

அமைச்சரின் செயலாளர் வீட்டில் ரூ.30 கோடி வரை கட்டு கட்டாக பணம் சிக்கியது ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News