உள்ளூர் செய்திகள்

பலத்த மழை, சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தன

Published On 2024-05-06 04:34 GMT   |   Update On 2024-05-06 04:34 GMT
  • சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது.
  • காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொட்டியம்:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் அனல் வீசும் வெப்ப காற்றினால் பொதுமக்கள் வெளியே தலை காட்ட அஞ்சிய நிலையில் நேற்று இரவு சுமார்7.30 மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது. அப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் காட்டுப்புத்தூர், சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, மற்றும் காட்டுப்புத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், ஏலரசி, கற்பூரவள்ளி, உள்பட பல்லாயிரக் கணக்கான வாழையை பயிரிட்டு வந்தனர். இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News