செய்திகள்

கோட்டூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்

Published On 2017-06-21 17:17 GMT   |   Update On 2017-06-21 17:17 GMT
கோட்டூர் அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கடைவீதியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே இந்த மதுக்கடையினை உடனடியாக மூட வலியுறுத்தி தெற்கு வாட்டார், செல்லத்தூர், வழச்சேரி, புத்தூர், திருவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த மாதம் மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மதுக்கடையினை திறப்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடையினை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் துணை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், தி.மு.க. நிர்வாகி தங்கராசு, அ.தி.மு.க. நிர்வாகி குஞ்சுப்பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News