என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC"

    • மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகையின் போது ‘டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

    சென்னை:

    'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் மது பிரியர்கள் உஷாராகி முந்தைய நாளே கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

    அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது 'டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர்.
    • வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சுரேஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்கு மார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது.

    3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதே போல் கியூ ஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.1000 கோடி என சாதனை படைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
    • போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.

    அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.

    இந்த ஆண்டு மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் மது விற்பனையும் கூடியுள்ளது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது.

    காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது.

    நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. இதற்குக் காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். அதனால் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.

    நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 4 நாட்களில் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் நேற்று வழக்கமான அளவே விற்பனை நடந்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    புதிய ரக மதுபானங்களும் அதிக அளவில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்ததால் தேவையான மது வகைகளை வாங்கி அருந்தினர்.

    குறைந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று இருந்ததால் ஓட்டல்களில் உள்ள மது பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
    • பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது தி.மு.க. அரசு!

    "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.

    அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது! என்று கூறியுள்ளார். 



    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுவகைகள் விற்பனை பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை, 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள்/விற்பனையாளர்கள்/உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
    • காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.

    சென்னை:

    மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

    முதலில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.

    இந்த சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.

    இதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுபான விற்பனை கடையில் ஒப்படைக்கும்போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.

    நாளை (1-ந்தேதி) அரசு விடுமுறை என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதால் அனைத்து வகையான சரக்குகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை களை கட்டும் என்பதால் எல்லா கடைகளிலும் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை புத்தாண்டு விற்பனை அனல் பறக்கக்கூடும். பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கூடங்கள் நிரம்பி இருக்கும். சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான அளவு எல்லா கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும். புத்தாண்டில் கூடுதலாக ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 240 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
    • இது தொடர்பாக கேள்வி கேட்டும், பதில் கூறாததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு.

    சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். கடை விற்பனையாளர் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.

    பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இது வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திரும்பி வழங்கிட உத்தரவிடக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.

    அந்த கடை விற்பனையாளர் தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.

    நாற்று நடப்பட்ட கொஞ்ச நாட்களில் மழை நீரில் நாற்றுகள் மூழ்கி அழுகி வீணாகி விட்டதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகளை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தூர்வாரும்பணி நடைபெற்று விட்டதாக கூறுகிறது.

    ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிப்பது போல் முதலில் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை. எனவே தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும் முளைத்தும் நெல்கள் வீணாகிறது.

    எனவே அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது அவருடன் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

    • டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இது போன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடை கள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. எப்.எல் 2 கொடுக்க வேண்டுவது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல. டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றது. மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். டாஸ்மாக் கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்லமுடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ, பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

    இதனை சொன்னால் பலவிதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மது வாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.

    தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டெட்ரா பேக் நடை முறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. டெட்ரா பேக் திட்டம் மது விற்பனையை பிரமோட் செய்வதற்கு அல்ல. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கூறும் கருத்தை வைத்து தான் முடிவெடுக்க முடியும். எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது.

    பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
    • குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும். காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.

    தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் மதுபானமே.

    சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன. எனவே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×