செய்திகள்
மீனா

பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பலி

Published On 2017-05-30 03:25 GMT   |   Update On 2017-05-30 03:25 GMT
மயிலாப்பூரில் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பெண் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை:

சென்னையில் வார விடுமுறை நாட்களில் கிழக்கு கடற்கரை சாலை, மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. பந்தயத்தில் வெற்றி பெறும் நபருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர்களின் கண்காணிப்பை மீறி மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் அரங்கேறி வருகின்றன. அவர்கள் கண்மூடித்தனமாக மோட்டார் சைக்கிளை ஓட்டுவதால், சாலையில் நடந்தோ, இதர வாகனங்களிலோ செல்லும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் இணை கமிஷனர் பவானீஸ்வரி நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அடையாறு மேம்பாலத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை 3 பேரும், அடையாறு மேம்பாலத்தில் இருந்து பாரிமுனை வரை 3 பேரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் பந்தயமாக போட்டிபோட்டு சென்றனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் பின்னால் ஒருவர் என மொத்தம் 12 பேர் பந்தயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மந்தைவெளி, ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த மீனா (வயது 55) மற்றும் யசோதா (60) ஆகிய 2 பேரும் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் இருவர் மீதும் பலமாக மோதியது.

இதில் மீனா, யசோதா ஆகியோர் சில அடி தூரத்துக்கு தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்துக்கு சாலையில் இழுத்துச்சென்றது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெண்கள் மீது மோதிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 சிறுவர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து அடையாறு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

படுகாயம் அடைந்த மீனா, யசோதா ஆகியோர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மீனா ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

யசோதா ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆழ்வார்பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்களையும் கைது செய்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பெண் பலியானது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News