செய்திகள்

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2017-05-25 12:27 GMT   |   Update On 2017-05-25 12:27 GMT
தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக, தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிகையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும் இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.

விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள்.

மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News