செய்திகள்

பணமதிப்பு நீக்க அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்: ப.சிதம்பரம்

Published On 2017-05-21 04:57 GMT   |   Update On 2017-05-21 04:57 GMT
கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் ஒழியவில்லை என்றும் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், பாரத பிரதமர் அறிவித்த பணமதிப்பு நீக்கம்தான் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி சிதம்பர நகர் திடலில் நேற்று மாலை 7 மணிக்கு காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அருள், காமராஜ், சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

இந்திரா காந்தியை அரசியலில் அறிமுகப்படுத்தியவர் காமராஜர். அப்போது அவருக்கு நேருவின் மகள் என்ற தகுதியை விட வேறு தகுதி இல்லை என்று பாகிஸ்தானில் உள்ளவர்கள் பேசினார்கள். அதனாலேயே அவர்கள் இந்தியா மீது போர் தொடுத்தார்கள். ஆனால் அப்போது இந்திய ராணுவம் எதிர்த்து சண்டையிட்டு தனது பலத்தை வெளிபடுத்தியது. அப்போது பா.ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய் இந்திரா காந்தியின் முகத்தில் காளியை பார்க்கின்றேன் என்று கூறினார். அந்த அளவிற்கு இந்திரா காந்தி தனது திறமையை வெளிபடுத்தினார்.

இந்தியாவில் கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இலங்கை சென்றார். அப்போது அவர் அங்கு இருந்த புத்த பிட்சுக்கள் காலில் விழுந்து வணங்கினார். ஆனால் அவர்கள் யாரும் எழுந்திரிக்கவில்லை. இது அவருக்கு ஏற்பட்ட அசிங்கம் மட்டும் அல்ல. இந்தியாவிற்கு ஏற்பட்ட அசிங்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசும் போது கூறியதாவது:-



இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைமை பொறுப்பை நரேந்திர மோடி ஏற்றுள்ளார். இதனை மறுக்கவில்லை. ஆனால் பிரதமர் சொன்னதை செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் அவர் சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் பா.ஜனதா கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதே.

திடீரென்று ஒரு நாள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் கருப்பு பணம், ஊழல், கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த அறிவிப்பால் ஏழை மக்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர். கருப்பு பணம் ஒழியவில்லை.

வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த 3 ஆண்டுகளில் ஊழல் ஒழியவில்லை. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், பாரத பிரதமர் அறிவித்த பணமதிப்பு நீக்கம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News