செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2017-05-13 23:42 GMT   |   Update On 2017-05-13 23:42 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கடல் காற்று சாதகமாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் அளவும் சற்று குறைந்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தை(இன்று) பொறுத்தவரையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இதேபோல், வருகிற 17-ந்தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஞாயிறு (இன்று) மற்றும் திங்கட்கிழமைகளில் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கொடைக்கானல் 9 செ.மீ., நாங்குநேரி 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., ஆண்டிப்பட்டி, அருப்புக்கோட்டை, சின்னக்கல்லாறு, பூதப்பாண்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., உசிலம்பட்டி, குன்னூர், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 
Tags:    

Similar News