செய்திகள்

மதுரையில் இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி திட்டமா? - கைதான 3 பேரிடம் விசாரணை

Published On 2017-01-27 06:46 GMT   |   Update On 2017-01-27 06:46 GMT
மதுரையில் பைப் வெடிகுண்டுகள் சிக்கியது தொடர்பாக கைதான 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை கொலை செய்வதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மதுரை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி கடந்த வாரம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சில அமைப்பினர் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனால் சென்னையில் வன்முறை வெடித்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து பெரிய அளவில் கலவரத்துக்கு திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பினர் குடியரசு தின விழாவை சீர்குலைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் அமைதியான முறையில் மாநிலம் முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தன.

இந்த நிலையில் சென்னையில் நடந்தது போன்று மற்ற இடங்களிலும் கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் அதிரடி சோதனையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் ‘பைப்’ வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கே.புதூர் காந்திபுரத்தில் உள்ள தையல் கடை ஒன்றில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு 2 ‘பைப்’ வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தையல் கடையின் உரிமையாளர் அப்துல் ரகுமான் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரே பைப் வெடிகுண்டுகளை தனது கடையில் வைத்து விட்டு சென்றதாக கூறினார்.

இதனை தொடர்ந்து மதுரை மதிச்சியம் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல்லாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் ஒத்தக்கை அப்துல்லா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டுகளை பதுக்குவதற்கு உடந்தையாக இருந்த காதர் ஷெரிப் என்பவரும் சிக்கினார். இவர்கள் 3 பேரிடமும் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள் 10 இஞ்ச் நீளம் உள்ளது. அதில் பேட்டரி மற்றும் டைமர் கருவிகளும், வயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டை வைத்து தூரத்தில் இருந்து இயக்கி வெடிக்க செய்யும் வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது.

தேனி கம்பத்தை சேர்ந்த சையது என்பவரிடமிருந்து வெடி பொருட்களை வாங்கினேன் என்று அப்துல்லா தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து சையதுவின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர். தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலனை கொலை செய்வதற்காக வெடிகுண்டுகளை மதுரையில் பதுக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராமகோபாலன் பல்லடத்தில் நேற்று நடந்த இந்து முன்னணி உரிமை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று ராமகோபாலன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநாடு முடிந்ததும் ரகசிய இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். இன்று காலை திருப்பூரில் இருந்து சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு வந்தார்.

ஜல்லிக்கட்டுக்காக மதுரை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமாக காணப்பட்டது. இதனை பயன்படுத்தி வெடி குண்டுகளை வைக்க திட்டமிடப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்து இயல்பு நிலை திருப்பியுள்ள நிலையில் மதுரையில் பைப் வெடி குண்டுகள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News