உலகம்

தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப்பயிற்சி

Published On 2024-05-23 05:30 GMT   |   Update On 2024-05-23 05:30 GMT
  • தைவானை மிரட்டுவதற்காக அந்நாட்டை சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
  • சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது.

பீஜிங்:

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.

தைவானை மிரட்டுவதற்காக அந்நாட்டை சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதற்கிடையே தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அந்நாட்டை சுற்றி சீனா இன்று காலை திடீரென்று இரண்டு நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.

மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்பட தீவைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளைச் சுற்றியும் போர் பயிற்சிகள் நடந்து வருகிறது. இதில் சீன ராணுவத்தின் போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு வலுவான தண்டனையாக இருக்கும். கூட்டு கடல்-வான் போர் தயார்நிலை ரோந்து, முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள், படைகளின் கூட்டு உண்மையான போர் திறன்களை சோதிக்க தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. தைவான் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு இது ஒரு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் தலையீடு, ஆத்திரமூட்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும் என்றார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது. இதுகுறித்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும். தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News