உலகம்

மிக நீண்ட போருக்கு தயார் - ஈரான் அறிவிப்பு.. மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அரசு அழைப்பு

Published On 2026-03-04 13:49 IST   |   Update On 2026-03-04 13:49:00 IST
  • ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனமாக இருக்கும்.
  • இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.

 ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.

பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் ஈரான் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம், எனவே ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனமாக இருக்கும்.

எதிரியிடம் ஒரு குறிப்பிட்ட அளவு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்" என்றார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாக மத்திய கிழக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நீங்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும் என்று நம்பினால் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

சில விமானங்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன.

ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகளும் இந்த நேரத்தில் திறந்திருக்கும். புறப்பட முடியாதவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News