செய்திகள்
பிரதமர் மோடி- எடப்பாடி பழனிசாமி

மதுரையில் ஏப்ரல் 2-ந்தேதி பிரதமர் மோடி-எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் பிரசாரம்

Published On 2021-03-23 06:24 GMT   |   Update On 2021-03-23 06:24 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 30-ந்தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேப்போல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 30-ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் திருப்பூர், கோவை, கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து தாராபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநில தலைவரும் வேட்பாளருமான எல்.முருகன் முன்னின்று செய்து வருகிறார்.

பிரசார கூட்டத்திற்காக தாராபுரம் உடுமலைரோடு ஜீவா காலனி பகுதியில் 63 ஏக்கரிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொதுக்கூட்ட மேடை மற்றும் பல்வேறு பணிகளை தொடங்குவதற்காக கால் கோள் விழா நாளை நடக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைக்கின்றனர்.

பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சமதளமாக்கப்படுகிறது. அதன்பிறகு மேடை, பந்தல் அமைக்கப்பட உள்ளது.

இதனிடையே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லியில் இருந்து வருகை தர உள்ளனர். அவர்கள் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

அடுத்து 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி மீண்டும் மோடி தமிழகம் வருகிறார். ஒரே நாளில் மதுரை, நாகர்கோவில் ஆகிய 2 நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியிலும் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.



நாகர்கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்ய தமிழகம் வருவதால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது குறித்து பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேச பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி தாராபுரம் வர உள்ளார். அவரது வருகைக்கு பின் மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு மேலும் அதிகரிக்கும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்புக்கும் வழிவகுக்கும்” என்றார்.
Tags:    

Similar News