சினிமா

டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி: அ.தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் - கமல்ஹாசன் ஆவேசம்

Published On 2017-09-25 05:23 GMT   |   Update On 2017-09-25 05:23 GMT
டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் உள்ள பள்ளி மாணவன் பலியானதற்கு காரணமான அ.தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ஆவேசம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் அவர் எப்போது தீவிர அரசியலுக்கு வருவார் என்பதில் கேள்விக்குறி உள்ளது. அதுபோல அவர் தனிக்கட்சி தொடங்குவதாக இருந்தால், எப்போது தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய அரசியலையும், அரசியல்வாதிகளையும் அடிக்கடி டுவிட்டரில் சிறிய தகவல்களை வெளியிட்டு கமல்ஹாசன் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அ.தி.மு.க. அரசு மீது அவர் நேரடியாக தாக்குதல்களை நடத்துகிறார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் அடிக்கடி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தபடி உள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்த கருத்தில், “டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாவிட்டால் இந்த வி‌ஷயத்தில் இருந்து தமிழக அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்“ என்றார்.



அமைச்சர்கள் இதற்கு பதில் அளித்தனர். “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றனர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது” என்றார்.

இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் பார்கவ் டெங்கு காய்ச்சல் பாதித்து நேற்று உயிரிழந்தார். இது நடிகர் கமல்ஹாசனை ஆவேசப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

டெங்கு காய்ச்ல் பரவி வருகிறது, கட்டுப்படுத்துங்கள் என்று நான் பல தடவை கூறினேன். ஆனால் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது.



டெங்கு காய்ச்சலின் கோர முகத்துக்கு தற்போது கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் பார்கவ் உயிரை கொடுத்துள்ளார். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு இதற்கு பொறுப்பு ஏற்று உடனே பதவி விலக வேண்டும்.

ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு செயல்படாத அரசாக உள்ளது. எனவே பெற்றோர்கள் தான் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News