செய்திகள்

பரங்கிமலையில் விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி முடிந்தது

Published On 2018-12-15 11:05 GMT   |   Update On 2018-12-15 11:10 GMT
ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. #TrainAccident #StThomas

ஆலந்தூர்:

கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.

அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.

அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas

Tags:    

Similar News