செய்திகள்

ஜனாதிபதியை 26-ம் தேதி சந்திக்கிறார் மோடி- அடுத்த வாரம் பதவியேற்பு விழா

Published On 2019-05-23 10:30 GMT   |   Update On 2019-05-23 10:30 GMT
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

அவ்வகையில் 17-வது பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இந்த இமாலய வெற்றியால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார். 26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News