செய்திகள்

மன்மோகன் சிங் தமிழ்நாட்டிலிருந்து மேல்-சபை எம்.பி. ஆகிறார்?

Published On 2019-06-06 11:40 GMT   |   Update On 2019-06-06 11:40 GMT
தி.மு.க. ஆதரவுடன் தமிழ்நாட்டில் இருந்து மன்மோகன் சிங்கை பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:

2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் நாங்குனேரி தொகுதியில் போட்டியிட்ட எச். வசந்தகுமார் வெற்றி பெற்றார். தற்போது அவர் கன்னியாகுமரி எம்.பி. ஆகி இருக்கிறார். எனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப்பதிலாக தி.மு.க. போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சட்டசபையில் தி.மு.க. பலம் 101 ஆக உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 102 அக அதிகரிக்கும்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்த்து 110 பேர் இருக்கிறார்கள். இதன் மூலம் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேல் சபைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க. சார்பில் மேல்- சபை எம்.பி.யாக இருக்கிறார். மற்றொரு எம்.பி. யாக காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தேர்ந்து எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாங்குனேரி தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த முறை மன்மோகன் சிங் அசாமில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி தேர்ந்து எடுக்கப்பட்டார். இங்கிருந்து மேல்-சபைக்கு ஒரு எம்.பியை தேர்வு செய்ய 43 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். தற்போது அசாமில் காங்கிரஸ் பலம் 25 ஆக உள்ளது. எனவே, இங்கிருந்து மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

ஆகவே தி.மு.க. ஆதரவுடன் தமிழ்நாட்டில் இருந்து மன்மோகன்சிங்கை பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும் போது, “ இதுவரை காங்கிரசில் இருந்து இது போன்ற கோரிக்கை எதுவும் தி.மு.க.வுக்கு வந்ததாக தெரியவில்லை. காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்” என்றார்.

இந்த நிலையில் மன்மோகன்சிங்கை தமிழ் நாட்டில் இருந்து எம்.பி. ஆக்கும் முயற்சியில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News