search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்,  தாத்தா-பாட்டியுடன் தீயில் கருகி பலி
    X

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா-பாட்டியுடன் தீயில் கருகி பலி

    அமெரிக்காவில் வீட்டினுள் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் மாகோ மற்றும் அவருடைய தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் தீயில் உடல் கருகி இறந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஹாலீன் மாகோ. இவர் தனது தந்தை வழி தாத்தா கவுர் காயிந்த் (வயது 82), பாட்டி பியாரா காயிந்த் மற்றும் தன்னுடைய 8 வயது மகள், 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    ஹாலீன் மாகோவின் உறவுக்கார ஆண் ஒருவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஹாலீன் மாகோவின் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு அவருடைய வீட்டில் கூடினர்.

    அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக வீட்டினுள் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடித்ததை அறிந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் தீ மளமளவென பரவி ஒட்டுமொத்த வீடும் பற்றி எரிந்தது.

    குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மரண ஓலமிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஹாலீன் மாகோ மற்றும் அவருடைய தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் தீயில் உடல் கருகி இறந்தனர்.

    ஹாலீன் மாகோவின் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு ஹாலீன் மாகோவின் 8 வயது மகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற அனைவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வீட்டினுள் தீப்பிடித்தது எப்படி என்பது தெரியவில்லை. இது பற்றி நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×