search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதித்துறை மற்றும் ராணுவத்தினர் மீது நவாஸ் ஷெரீப் பாய்ச்சல்
    X

    நீதித்துறை மற்றும் ராணுவத்தினர் மீது நவாஸ் ஷெரீப் பாய்ச்சல்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தான் கலந்து கொண்ட பேரணியில் பேசுகையில், நீதித்துறை மற்றும் ராணுவத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
    லாகூர்:

    சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு மற்றும் பணம் பதுக்கல் செய்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பனாமா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக  அப்பாஸி பதவியேற்றார்.

    இதற்கிடையே, பதவி பறிபோன பின்னர் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் வாகன பேரணியை தொடங்கினார்.

    இஸ்லாமாபாத் நகரில் தொடங்கிய பேரணி, 380 கிலோமீட்டர்கள் கடந்து லாகூரில் முடிவடைகிறது. காரில் வந்த நவாஸ் ஷெரீப்புக்கு, கட்சித் தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் பேரணி இன்று பஞ்சாப்பில் உள்ள முரிடிகே நகரை சென்றடைந்தது. அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியதாவது:



    பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் நேரம் வந்துவிட்டது. யாரோ ஒரு சிலரா அல்லது 20 கோடி மக்களா? பாகிஸ்தான் யாரோ ஒரு சிலரின் சொத்து கிடையாது.

    என்னை தகுதி நீக்கம் செய்தது உங்களின் முடிவல்ல. நான் ஊழலில் ஈடுபட்டது தெரிய வந்தால் மட்டுமே என்னை நீங்கள் தூக்கி வீசவேண்டும். நீங்கள் தேர்வு செய்துள்ள பிரதமருக்கு எதிராக யாரோ சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

    எனவே, பாகிஸ்தானில் புரட்சி தொடங்க வேண்டும். அதற்காக நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புரட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா? என நவாஸ் ஷெரீப் கேட்டதற்கு, அவரது ஆதரவாளர்கள் தங்கள் கைகளை உயர்த்தி ‘உங்களுக்கு எப்போதும் எங்களின் ஆதரவு உண்டு’ என்றனர்.

    தன்னை பதவி நீக்கம் செய்த நீதித்துறை மற்றும் ராணுவத்தினர குற்றம் சாட்டும் வகையிலேயே நவாஸ் ஷெரீப் இப்படி பேசியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×