search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாகூர்"

    • லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
    • அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்

    உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

    நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.

    தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.

    காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.

    குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.

    2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.

    இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

    காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ×