search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி மலரும்- வைகோ பிரசாரம்
    X

    18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி மலரும்- வைகோ பிரசாரம்

    18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று தி.மு.க.வின் ஆட்சி மலரப்போகிறது என்று வைகோ பேசியுள்ளார். #vaiko #dmk

    நாகப்பட்டினம்:

    நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் திறந்த வேனில் நின்று பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடிய மக்களின் தலையில் இடி விழுகிற மாதிரி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருக்கிறார் மோடி. நாகையில் 20, கடலூரில் 25 என மொத்தம் 45 இடங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது.

    கார்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டாக தமிழக அரசு மாறி விட்டது. கார்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கி இருக்கிறது. ரூ.8.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் கல்விக்கடனையும், பயிர் கடனையும் மோடி அரசு ரத்து செய்யவில்லை.

    மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க கூடிய நெஞ்சுரம் இல்லாத அரசு, நீட் தேர்வை எதிர்க்க முதுகெலும்பில்லாத அரசு தமிழக அரசு. தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

    18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று தி.மு.க.வின் ஆட்சி மலரப்போகிறது. கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் சின்னாபின்னமானபோது மோடி நேரில் பார்வையிடவில்லை. டெல்டா மாவட்ட மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவாரூர் பழைய பஸ் நிலைய பகுதியில் திருவாருர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட் பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் .நாகை பாராளுமன்ற வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

    அப்போது வைகோ பேசியதாவது:- திமுக சுட்டிக் காட்டிய அனைத்து அம்சங்களையும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது விவசாய கடன் தள்ளுபடி, 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72,000 போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது சாத்தியமற்றது என பலரும் கூறுகின்றனர்.

    ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால் சாத்தியப் படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூறியிருக்கிறாரா? 89 பேர் பலியானார்கள். அவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறினாரா? இவை வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி தாய் நாட்டிற்கு வர முடியாதா

    இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #dmk

    Next Story
    ×