search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணும் பொங்கல் விழா - நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    காணும் பொங்கல் விழா - நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். #KaanumPongal
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

    மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று நேரத்தை செலவழிப்பது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் முயல் தீவு மற்றும் தெர்மல் நகர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் ஏராளமான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினார்கள். இப்பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர்களுடன் பச்சையாற்றில் குளித்தனர்.

    இந்தாண்டு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடினர். வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்பட பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என கடும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல் முறையாக கழிவறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினரும், களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்திருந்தனர். #KaanumPongal

    Next Story
    ×