search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அண்ணா சிலை முன்பு நந்தினி, அவரது தந்தை ஆனந்த் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
    X
    காரைக்குடி அண்ணா சிலை முன்பு நந்தினி, அவரது தந்தை ஆனந்த் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

    மோடிக்கு எதிராக போராட்டம்: மதுரை வக்கீல் நந்தினியை பா.ஜனதாவினர் தாக்க முயற்சி

    மதுரையில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வக்கீல் நந்தினியை பாரதிய ஜனதாவினர் தாக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJP #Modi
    காரைக்குடி:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் நந்தினி அவரது தந்தை ஆனந்த்துடன் மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்.

    அதன்படி இன்று காரைக்குடிக்கு வந்த நந்தினி, அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் மது ஒழிப்பு குறித்து பிரசாரம் செய்வதற்காக அங்குள்ள கல்லூரிகளுக்கு செல்ல முயன்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம், மாணவர்களை சந்திக்க மறுத்து விட்டது.

    இதையடுத்து நந்தினி, ஆனந்த் ஆகியோர் மது ஒழிப்புக்கு எதிரான வாசகங்களை ஏந்திக்கொண்டு செக்காலை ரோடு, அண்ணாசிலை சந்திப்பு மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபயணமாக சென்று பிரசாரம் செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் “மது வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு” என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் விஸ்வநாத கோபாலன், சந்திரன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் நந்தினி, ஆனந்த்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் வைத்திருந்த பதாகைகளை கிழித்து எறிந்து தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டனர்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தாக்க முயன்றதை கண்டித்து நந்தினி, ஆனந்த் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நந்தினி கூறுகையில், மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றதால் பாரதிய ஜனதா கட்சியினர் எங்களை தாக்க வந்தனர்.

    அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் போலீசில் புகார் தெரிவித்திருக்கலாம். பலமுறை பா.ஜ..க.வினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    தற்போது நடந்த சம்பவத்திற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார். #BJP #Modi
    Next Story
    ×