search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுமுறை என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    விடுமுறை என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.

    பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×