search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் அரசியலில் வெற்றிபெற்று ஏழைகளுக்கு உதவி செய்வார்- கல்வி உதவி பெற்ற மாணவி பேட்டி
    X

    கமல் அரசியலில் வெற்றிபெற்று ஏழைகளுக்கு உதவி செய்வார்- கல்வி உதவி பெற்ற மாணவி பேட்டி

    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெற்று ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கல்வி உதவி பெற்ற மாணவி கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருவள்ளூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்து உள்ளார். அந்த கிராமத்தை மேம்படுத்தி முன் மாதிரி கிராமமாக திகழ்வதற்கான அனைத்து பணிகளையும் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்தார். இவரது தந்தை முத்து கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். தாய் லட்சுமி மாதம் தோறும் கிடைக்கும் உதவித் தொகை மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வந்தார்.

    இதுபற்றி கமல்ஹாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மாணவி சுனிதாவின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து நெமிலிசேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டப்படிப்பு படிப்பதற்கான இடத்தை சுனிதாவுக்கு பெற்று கொடுத்தார்.

    இதையடுத்து மாணவி சுனிதாவையும், அவரது தாய் லட்சுமியையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்துக்கு கமல்ஹாசன் வரவழைத்தார். பின்னர் அவர்களிடம் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

    இது குறித்து மாணவி சுனிதாவிடம், கேட்டபோது கூறியதாவது:-

    எனது உயர் கல்விக்கு கமல்ஹாசன் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் உதவி செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கல்லூரி படிப்பை நல்ல முறையில் அதிக தேர்த்தியோடு முடிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். இதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் என்னைப்போல உள்ள ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைப்போல் அதிகத்தூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த 12 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை கமல்ஹாசன் வழங்கினார்.

    இந்த சிறுவனின் சகோதரிகள் 2 பேரும் உடலில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களது மருத்துவ செலவையும் ஏற்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

    அவர்களை வருகிற 18-ந் தேதி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதற்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×