search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி, கடையநல்லூரில் இடி- மின்னலுடன் பலத்த மழை
    X

    தென்காசி, கடையநல்லூரில் இடி- மின்னலுடன் பலத்த மழை

    தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் புயல் சின்னம் காரணமாக கடந்த 14-ந் தேதி முதல்2 நாட்கள் ஆங்காங்கே மழை பெய்ததது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இந்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியளவில் தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் சுமார் 1மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி பகுதியில் அதிக பட்சமாக 74 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    கடையநல்லூர், சொக்கம் பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 33.70 அடியாக நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 1,591.53 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 38.39 அடியாக நீர்மட்டம் உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 83.68 அடியாக நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    தென்காசி - 74

    மணிமுத்தாறு - 2.40

    பாளை - 2.20

    கோவில்பட்டியிலும் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. மதியம் 2 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி மெயின் ரோடு, புதுரோடு சந்திப்பு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சில வீடுகளில் மின்கசிவு காரணமாக வயர்கள் எரிந்து சேதம் அடைந்தன. சில வீடுகளில் டி.வி.க்களும் சேதம் அடைந்தன.

    உடன்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளான குலசேகரன்பட்டிணம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தெருக்கள், பஜார் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரபுரம் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி பகுதியில் 46 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடியில் 6.7மில்லிமீட்டரும், கயத்தாறில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×