search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியை சந்தித்த நெகிழ்ச்சியில் பாப்பாத்தி.
    X
    கருணாநிதியை சந்தித்த நெகிழ்ச்சியில் பாப்பாத்தி.

    கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்திய ஈரோடு மூதாட்டி

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய ஈரோடு மூதாட்டி பாப்பாத்தி, கருணாநிதியை நேரில் சந்தித்து 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 74). 8 வயது சிறுமியாக இருந்த போதே தி.மு.க. மீது பற்று கொண்டவர். பாப்பாத்தியும் சென்னிமலை லட்சுமி என்பவரும் கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சென்று வருவார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு தவறாமல் பல வருடங்களாக சென்று வருவது வழக்கம்.

    இப்போது சென்னிமலை லட்சுமி இல்லை என்பதால் பாப்பாத்தி மட்டும் கட்சி கூட்டங்களுக்கு சென்று வருகிறார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு நடத்தி வருவதை கேள்விப்பட்ட பாப்பாத்தி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்த போது அவரது சொந்த பணத்தில் சென்னை வந்துள்ளார்.

    ஆனால் பாப்பாத்திக்கு கட்சி பொறுப்பு எதுவும் இல்லாததால் அவரை ஆய்வு கூட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    அறிவாலய வாசலில் நின்ற அவரை நிருபர்கள் பேட்டி எடுத்து வெளியிட்டனர். இதையறிந்த மு.க.ஸ்டாலின் அவரை பற்றி விசாரித்தார். அதற்குள் பாப்பாத்தி ஈரோடு சென்று விட்டார்.

    எந்த பதவியிலும் இல்லாமல் கட்சிக்காக பாடுபடும் பாப்பாத்தியை அழைத்து ஊக்கப்படுத்தி உபசரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதினார். உடனே அவரை சென்னைக்கு அழைத்து வரும்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பாப்பாத்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர். தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அவரை அழைத்து சென்றனர்.


    பாப்பாத்தியுடன் மு.க.ஸ்டாலின் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட காட்சி.

    அங்கு மு.க.ஸ்டாலினை பார்த்ததும் பாப்பாத்தி உணர்ச்சிப்பூர்வமாக நெகிழ்ச்சியுடன் பேசினார். கட்சி கூட்டங்கள், மாநாடு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் வருவேன், உங்களை நேரில் பார்த்து பேசும் பாக்கியம் இப்போதுதான் எனக்கு கிடைத்துள்ளது என்று பாப்பாத்தி உணர்ச்சி பொங்க பேசினார்.

    அவரது பேச்சில் நெகிழ்ந்து போன மு.க.ஸ்டாலின், நான் உங்களை பல கூட்டங்களில் பார்த்திருக்கிறேன் என்று கூறி முழுமையாக விசாரித்தார். உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா? என்றும் கேட்டார்.

    ஆனால் தனக்கு எந்த உதவியும் வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் முதல்-அமைச்சராக வந்தால் போதும், அதுதான் என் ஆசை என்றார்.

    அதன்பிறகு மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவும் பாப்பாத்தியுடன் அமர்ந்து பேசினார். பாப்பாத்திக்கு டீ கொடுத்து உபசரித்தனர்.

    அப்போது பாப்பாத்தியுடன் மு.க.ஸ்டாலின் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார். துர்கா ஸ்டாலினும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அதன் பிறகு உங்கள் விருப்பம் என்ன என்று கேட்டதற்கு தலைவர் கலைஞரை பார்க்க ஆசையாக உள்ளது என்று பாப்பாத்தி கூறி இருக்கிறார்.

    உடனே அதற்கும் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். கோபாலபுரம் வீட்டுக்கு பாப்பாத்தியை அழைத்து சென்று கருணாநிதியை சந்திக்க வைத்தார்.

    அப்போது கருணாநிதியின் கைகளில் முத்தமிட்ட பாப்பாத்தி என் தங்கம், நீங்கள் 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். உங்கள் சேவை நாட்டுக்கு தேவை என்று கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசினார்.

    கருணாநிதியிடம் பாப்பாத்தியை பற்றி மு.க.ஸ்டாலினும் எடுத்து கூறினார். அப்போது கருணாநிதி அவரை அடையாளம் கண்டு சிரித்தார்.

    இந்த நெகிழ்ச்சியான சந்திப்புகளை மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். பணம் எதையும் எதிர்பாராமல் கட்சிக்காக பாடுபடும் இவரைப் போன்றவர்களால் கட்சி வலிமை அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    2 நாள் சென்னையில் இருந்த பாப்பாத்தி நேற்றிரவு காரில் ஈரோடு புறப்பட்டுச் சென்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். #tamilnews





    Next Story
    ×