search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே முதல்வர் பழனிசாமி குலதெய்வ கோவிலில் நகை-பணம் கொள்ளை
    X

    ஈரோடு அருகே முதல்வர் பழனிசாமி குலதெய்வ கோவிலில் நகை-பணம் கொள்ளை

    ஈரோடு அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குலதெய்வ கோவிலின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள நசியனூர் பைபாஸ் ரோட்டில் அப்பாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர், சிவன், பார்வதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகிய விக்கிரங்களும் உள்ளது.

    இந்த கோவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி கோவிலுக்கு வந்து அடிக்கடி சாமி கும்பிட்டு விட்டு செல்வார்.

    வழக்கம் போல் நேற்று இரவு பூசாரிகள் கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு கோவில் உள்ளே இருந்த கோவில் அலுவலக கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    அலுவலகத்தின் அறையில் உள்ள பீரோவை கொள்ளையர்கள் உடைத்தனர். உள்ளே ரூ.1 லட்சம் கோவில் பணம் இருந்தது. மேலும் ரூ.50 அயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் இருந்தது. இவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    பிறகு கோவில் கருவறை கதவு பூட்டையும் உடைத்துள்ளனர். பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் உள்ளே கொள்ளையர்கள் செல்லவில்லை. பிறகு கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களுடன் தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவில் நடையை திறக்க வந்த பூசாரி சத்தி என்பவர் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அப்பாத்தாள் கோவிலில் திரண்டனர். அவர்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


    சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த அலுவலகம் உள்பட கோவில் பகுதிகளை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.பாரியும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை பெண் நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தார்.

    பொதுமக்கள் எப்போதும் நடமாடும் மேலும் அடிக்கடி வாகனங்கள் செல்லும் பகுதியில் உள்ள இந்த கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×