search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு 244 ரன் இலக்கு- 28 ரன்னில் ஆட்டமிழந்த தவான்
    X

    இந்தியாவுக்கு 244 ரன் இலக்கு- 28 ரன்னில் ஆட்டமிழந்த தவான்

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    Next Story
    ×