search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் மோதல்- 4 பேர் பலி
    X

    மேற்கு வங்காளத்தில் மோதல்- 4 பேர் பலி

    மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் நேற்று இரவு பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.

    கட்சி கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கலவரமாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொண்டனர்.

    இந்த பயங்கர மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ‌ஷங்கர் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    இதே போல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கைலும் மொல்லா சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். மோதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறும்போது, “பா.ஜனதா கட்சி கொடிகளை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அகற்றியதை பா.ஜனதா தொண்டர்கள் தடுத்துள்ளனர்.

    ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டு துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 3 பா.ஜனதா தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி ஜோதிப்ரியோ முல்லிக் கூறும்போது, “எங்கள் கட்சி தொண்டர் கைலும் மொல்லா கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது அவரை பா.ஜனதா தொண்டர்கள் தாக்கி உள்ளனர்.

    அவர் தப்பி சென்ற போது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். பா.ஜனதா மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர் குலைக்க முயற்சி செய்கிறது” என்றார்.

    இந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் செய்ய மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×