search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்தது- ராகுல் காந்தி
    X

    மோடியின் திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்தது- ராகுல் காந்தி

    மோடியின் திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #PMModi #Loksabhaelections2019
    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    ராகுல் காந்தி கடந்த 4-ந்தேதி வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்றே அவர் தனது சகோதரி பிரியங்காவுடன் வயநாட்டில் ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    2-வது கட்டமாக ராகுல்காந்தி கேரளாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பத்தனாபுரம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார்.

    இன்று அவர் தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். காலையில் சுல்தான்பத்தேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் ஆதரவு திரட்டினார்.

    முன்னதாக கண்ணூரில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இப்போது 3 முக்கிய பிரச்சனைகள் நாட்டை பாதித்துள்ளது. முதலாவது பாதிப்பு பொருளாதார சீர்குலைவாகும். மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டம், பண மதிப்பிழப்பு, தொழில்துறையில் புகுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. என்னும் கொள்கை வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    2-வது நாட்டின் முதுகெலும்புகளாக கருதப்படும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும், விவசாயிகளை இந்த அரசு புறக்கணித்ததும் ஒரு காரணமாகும். விவசாயிகளை புறந்தள்ளியதால் இந்நாட்டில் பல விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.

    3-வதாக நாட்டில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள். அம்பானி குடும்பத்தினருக்கு மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து கொடுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி பணம் இதற்கு ஒரு உதாரணமாகும்.

    இந்த பிரச்சனைகளை பற்றி தான் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு இவை அனைத்தையும் காங்கிரஸ் சரி செய்யும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராகுல்காந்தி திருவம்பாடி , வண்டூர் , சாலிச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் பிறகு 5.10 மணிக்கு கேரள பிரசார கூட்டங்களை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக காலையில் கண்ணூரில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். #RahulGandhi #PMModi #Loksabhaelections2019
    Next Story
    ×