search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதிவாகும் 50 சதவீதம் வாக்குகளை காகித தணிக்கை சோதனையுடன் சரிபார்க்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    X

    பதிவாகும் 50 சதவீதம் வாக்குகளை காகித தணிக்கை சோதனையுடன் சரிபார்க்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    தேர்தல்களில் இனி பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் முடிவுளை காகித தணிக்கை முறையுடன் சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்தினர். #OppnpartiesmeetEC #EVMissue #EVMresults #VVPATresults
    புதுடெல்லி:

    1999-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்  மற்றும் பிறமாநிலத் தேர்தல்களில்  சில பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    2004-ம் ஆண்டிலிருந்து அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

    பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து வந்த கோரிக்கைகளின் காரணமாகவும். தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) அமைப்புகளை வாக்குப் பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவுசெய்தது. 

    ஒரு முன்னோடி திட்டமாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில்  (VVPAT) வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறையை அறிமுகப்படுத்தியது. 

    இதற்கிடையில், இந்தியாவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து ஒருவர் காணொலி மூலம் செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

    இவ்விவகாரம் தற்போது இந்திய அரசியலில் சூடுபிடித்துள்ளது. இனிவரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    உலகில் உள்ள இரண்டு மூன்று நாடுகளில்தான் மின்னணு வாக்குப்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. இதர நாடுகள் எல்லாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    ஆனால்,  மின்னணு வாக்குப்பதிவு முறையில் மாற்றம் செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் கடந்த முதல் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில் தலைமை தேர்தல் ஆணையரை வரும் 4-ம் தேதி மாலை நாங்கள் (எதிர்க்கட்சி தலைவர்கள்) சந்திப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, அகமது பட்டேல், ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திரா முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் மஜித் மேனன், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரையென், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதிஷ் சந்திரா மிஸ்ரா, தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முஹம்மது சலிம் மற்றும் டி.கே.ரங்கராஜன், ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சய் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் டானிஷ் அலி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் தற்போது இழந்து விட்டதால்  இனி வரும் அனைத்து தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் முடிவுளை காகித தணிக்கை சோதனையுடன் சரிபார்க்க வேண்டும்’ என அவர்கள் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை உருவாக வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என நாங்கள் இன்றும் வலியுறுத்தினோம். 

    எனினும், பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இது சாத்தியப்படாது என்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீதம் வாக்குகளின் முடிவுகளை காகித தணிக்கை சோதனையுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார். #Oppnpartiesmeet #OppnpartiesmeetEC #EVMissue #EVMresults #VVPATresults 
    Next Story
    ×