search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்
    X
    கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கேரளாவில் பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும் - ராஜ்நாத் சிங்

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #RajnathSingh #BJP
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில பா.ஜனதா தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நீண்டநாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் மாநில தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை தொடர்ந்து ஸ்ரீதரன்பிள்ளை பா.ஜனதா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

    அவர் பதவி ஏற்றபிறகு பா.ஜனதா கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டவும் அவர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி கொச்சியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ., மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை மாறி வருகிறது. முதலில் நமக்கு ஒரு எம்.எல்.ஏ. பதவி ஓ.ராஜகோபால் மூலம் கிடைத்தது. அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிபெற்று மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளை கைப்பற்றி உள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும். பா.ஜனதா கட்சி ஜாதி, மத வேறுபாடு இன்றி மக்களுக்காக பாடுபடும் கட்சி ஆகும். ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக மதவாத கட்சி என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    மக்களுக்கு முன்மாதிரியாக திகழும் பாதிரியார்கள் பா.ஜனதாவில் இணைந்து உள்ளனர். பா.ஜனதாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கட்சியில் இணைந்ததாக கூறி உள்ளனர். கேரளாவில் எதற்கெடுத்தாலும் காங்கிரசும், கம்யூனிஸ்டும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அந்த நிலை விரைவில் மாறும்.

    இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட உதவியை செய்துள்ளது. தொடர்ந்து இந்த மாநில மக்களுக்காக பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RajnathSingh #BJP

    Next Story
    ×