search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்- தினகரன் பேட்டி
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்- தினகரன் பேட்டி

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை கடந்த 31-ந் தேதி முடிவடைந்தது. கோர்ட்டு தினமும் பல வழக்குகளை சந்திக்கிறது. இதனால் தீர்ப்பு எப்போது வரும் என்பதை கூற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை கூற வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. இதை கூற யாருக்கும் அதிகாரமும் இல்லை.

    இருப்பினும் 3-வது நீதிபதி வழங்கும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சசிகலாவுக்கு பெங்களூருவில் நிலவும் சீதோஷ்ண மாற்றம் தொடர்பான சில பாதிப்புகள் இருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் தவறானவை.

    சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் இந்தி மொழிகளை கற்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை.


    தூத்துக்குடியில் தூயக்காற்று, குடிநீர் இல்லை என்று கூறி போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. இதனால் உணர்ச்சி வசப்பட்டு குரல் எழுப்பிய சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜா விவகாரத்தில் தமிழக போலீசார் காட்டவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அடிமை அரசு உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தவறான முடிவு. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு செலவாகும் ரூ. 10 ஆயிரம் கோடியை கொண்டு மாநில சாலைகளை சீர்செய்யலாம். கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அத்துடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற செலவிடலாம். தொழிற்சாலைகள் கொண்டு வருவதாக கூறி புதிய திட்டங்களை கொண்டு வந்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்கள் என்ற அச்சத்தோடு தான் விடிகிறது.

    தமிழக மக்கள் இயற்கையிலேயே அமைதியானவர்கள். இதனால் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல் துறையினரால் தான் பிரச்சினைகள் உருவாகிறது. ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இதில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. இந்தியாவில் எங்கேயும் கேள்விப்படாத வகையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) வீட்டிலேயே சோதனை நடைபெற்றது. இவை அனைத்தும் தவறான நிகழ்வாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக தம்பிதுறை களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2 மாதங்களாக வருகிற பாராளுமன்ற தேர்தலை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    எங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வயது ஒரு தடை இல்லை.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதிக்குள் இந்த உறுப்பினர்கள் எண்ணிக் கையை எட்டி விடுவோம்.

    வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்திலும், 10-ந் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் படித்து நல்ல நிலையை அடைந்து வருகின்றனர்.

    கல்லூரியில் படித்து மருத்துவர்களான பலர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் “நீட்” என்ற ஆயுதத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு “நீட்” தேர்வு தேவையற்றது.

    ஆர்.பி. உதய்குமார், பாண்டிய ராஜன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    Next Story
    ×