search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அறங்காவலர் குழுவில் பெண் கிறிஸ்தவ எம்எல்ஏ நியமனம் - இந்து அமைப்புகள் எதிர்ப்பு
    X

    திருப்பதி அறங்காவலர் குழுவில் பெண் கிறிஸ்தவ எம்எல்ஏ நியமனம் - இந்து அமைப்புகள் எதிர்ப்பு

    திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழுவில் பெண் கிறிஸ்தவ எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டதற்கு இந்து அமைப்புகள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    நகரி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு புதிதாக 14 உறுப்பினர்களை நியமனம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டது.

    இதில் பயாகராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வான அனிதாவும் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் அனிதா எம்.எல்.ஏ. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் எப்படி நியமனம் செய்யலாம் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

    சமூக வலைதளங்களில் அனிதா எம்.எல்.ஏ. பேசும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் அவர் தான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும், தனது பை மற்றும் காரில் எப்போதும் பைபிள் வைத்து இருப்பேன் என்றும் கூறுகிறார்.

    இதனால் இந்து மத தார்மீக அறக்கட்டளையான திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை நியமனம் செய்வதா? என்று பல்வேறு இந்து அமைப்பினர், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தை சேர்ந்த 44 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

    வேற்று மத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அறங்காவலர் குழுவில் கிறிஸ்தவரை நியமனம் செய்தது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து இந்து தர்ம போராட்ட சமிதி தலைவர் நவீன்குமார் ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். அதுதான் நியாயம். தான் கிறிஸ்தவர் என்றும், எப்போதும் பைபிள் வைத்திருப்பேன் என்றும் கூறும் அனிதா எம்.எல்.ஏ.வை எப்படி நியமனம் செய்யலாம்?

    இதனால் கிறிஸ்தவர்களை புண்படுத்துவதாக எண்ண வேண்டாம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிலரை அறங்காவலர் குழுவில் நியமனம் செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலையிட்டு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதற்கிடையே அறங்காவலர் குழுவில் மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா நிதி அமைச்சர் சுதிர்முங்கந்திலார் மனைவி சப்னா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத்ராவ் கூறும்போது, திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் வேற்று மதத்தை சேர்ந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏவை முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமனம் செய்துள்ளார். ஒரு கிறிஸ்தவ அமைப்பிலோ, முஸ்லிம் அமைப்பிலோ வேறு மதத்தவரை உறுப்பினராக சேர்க்க முடியுமா?

    ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்து விட்டதாக கூறிய சந்திரபாபு நாயுடு தற்போது மகாராஷ்டிரா பா.ஜனதா மந்திரி மனைவிக்கு அறங்காவலர் குழுவில் இடம் அளித்துள்ளார். அப்படியென்றால் கூட்டணி முறிவு என்பது நாடகமா?

    திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் தமிழக பக்தர்கள் வருவார்கள். ஆனால் அறங்காவலர் குழுவில் தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையடுத்து அனிதா எம்.எல்.ஏ. வேற்று மதத்தை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் அனிதா எம்.எல்.ஏ. தன் மீது எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நான் இந்து மதத்தில்தான் இருக்கிறேன். வேறு எந்த மதத்துக்கும் மாறவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் என்னை சர்ச்சையில் சிக்க வைக்க சதி செய்கிறார்கள். நான் பேசும் வீடியோ 2014-ம் ஆண்டு டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது எடுக்கப்பட்டது.

    அதில் மாற்றம் (எடிட்) செய்து நான் கிறிஸ்தவர் என்று கூறுவதுபோல் வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பெற்றோர், கணவர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். யாரும் மதம் மாறவில்லை. எனது சில உறவினர்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர்.

    ஆரம்ப காலத்தில் நான் ஆசிரியையாக பணியாற்றினேன். இதனால் புத்தகங்கள் படிப்பது எனது வழக்கம். அனைத்து மத புத்தகங்களையும் படிப்பேன். எனக்கு எல்லா மதமும் சமம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×