search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனை
    X

    பா.ஜ.க. காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனை

    தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலமான மூன்றாவது அணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தாவுடன் சந்திரசேகர ராவ் நாளை ஆலோசனை நடத்துகிறார். #MamataBanerjee #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்த யோசனைக்கு ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தொடங்கப்பட்ட ஆண்டுதினம் வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது மூன்றாவது அணியை சந்திரசேகர ராவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் வேலைகளை சந்திரசேகர ராவ் விரைவுப்படுத்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து, நாளை கொல்கத்தா நகருக்கு செல்லும் சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது யாருக்கு சாதகமாக வாக்களிப்பது? என்பது தொடர்பாக சந்திரசேகர ராவ் முடிவு செய்வார் என தெரிகிறது. #MamataBanerjee #ChandrasekharRao
    Next Story
    ×