search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு
    X

    கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு

    பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் அரசு குறித்த புகார் புத்தகத்தையும் ஜவடேகர் வெளியிட்டார்.
    பெங்களூரு :

    பா.ஜனதா சார்பில் பெங்களூருவை காப்போம் என்ற பாதயாத்திரை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். பெங்களூருவில் வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும், ஏரிகள் அழிந்து விட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக பெங்களூரு மாறி வருவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய காங்கிரஸ் அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி குறித்த புகார் புத்தகத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பெங்களூரு குற்ற நகரமாக மாறிவிட்டது. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக பெங்களூரு மாறியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் ஒரு வாலிபரை கொடூரமாக தாக்கியுள்ளதே இதற்கு சாட்சியாகும்.

    போலீசாரை தாக்கி துப்பாக்கியை கொள்ளையடித்த சம்பவமும் நடந்துள்ளது. பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்ட நிதி குறித்து உரிய விவரங்களை அளிக்கும்படி பெங்களூரு மக்கள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கேட்கிறார்கள்.


    காங்கிரஸ் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பான புத்தகத்தை பெங்களூருவில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட காட்சி.


    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கர்நாடகத்திற்கு ரூ.73 கோடி மட்டுமே நிதி உதவி வழங்கி இருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை வளர்ச்சி பணிகளுக்காக செலவு செய்யாமல் அரசின் கஜானாவில் சித்தராமையா சேர்த்து விட்டார். பெங்களூரு பெல்லந்தூர் ஏரியை பாதுகாப்பது தொடர்பாக 3 முறை எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் ஏரியை பாதுகாக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது.

    அதனால் தான் பெங்களூரு நகரை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் இன்று பாதயாத்திரை நடைபெற உள்ளது. இந்த பாதயாத்திரை மொத்தம் 14 நாட்கள், 28 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் வீதம் பாதயாத்திரை நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருப்பது குறித்து மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் முன்பாக, முதலில் எதிர்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இதற்காக ஆலோசனை கூட்டத்திற்கு வரும்படி காங்கிரஸ் தலைவர்களுக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல, என்றார்.
    Next Story
    ×