search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
    X

    திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார். #LokSabhaElections2019 #MKStalin
    திருவாரூர்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் 9 கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரு கூட்டணிகளையும் ஏராளமான அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகள் போட்டி போட்டு ஆதரிக்கின்றன.

    கூட்டணி அமைப்பதில் தொடங்கி வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் பிரசாரத்தை தொடங்குவது ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைவர்களும், தி.மு.க. தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. நேற்று அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை பிரசார சுற்றுப்பயண திட்டத்தை வெளியிட்டார். முதல் கட்டத்தில் இன்று முதல் மொத்தம் 18 நாட்கள் அவர் இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார்.

    மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தனது பூர்வீக ஊரான திருவாரூரில் தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு அங்கிருந்த கருணாநிதி படத்துக்கும் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் திருவாரூர் கீழவீதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று அதிகாலை அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    திருவாரூர் கீழ சன்னதி தெரு, திருவள்ளுவர் நகர், வாசன் நகர், காந்தி நகர், மருதப்பாடி மற்றும் அய்யனார் கோவில் தெரு,கீழ வீதி உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருவாரூர் தொகுதி சட்டசபை வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

    வீதி வீதியாக சென்ற அவர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். நிறைய பேரிடம் அவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    பிரசாரத்தின் போது அவரை ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர். நிறைய இடங்களில் வாலிபர்களும், இளம்பெண்களும் சிரித்தப்படி மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டனர். அப்போது செல்பிக்காக அவர்களுடன் மு.க.ஸ்டாலின் பொறுமையாக நின்று விட்டு சென்றார்.



    வீதி, வீதியாக சென்ற மு.க.ஸ்டாலின் ஒரு கட்டத்தில் வீடு வீடாகவும் சென்று தி.மு.க., கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டார். வாக்காளர்களை கண்டதும் முகம் மலர கை கூப்பியப்படி மு.க.ஸ்டாலின் வணங்கி வாக்கு சேகரித்தார்.

    8 மணிக்கு பிறகு பல இடங்களில் நடந்தே சென்று அவர் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மு.க.ஸ்டாலின் தெருக்களில் நடந்து சென்ற போது எதிரே வரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி ஸ்டாலினிடம் கை குலுக்கினார்கள். அவர்களில் பலரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    இதுபோல திருவாரூர் வீதிகளில் பல இடங்களில் சிறுவர்-சிறுமிகள் மு.க. ஸ்டாலினுக்கு ஆர்வத்துடன் ஓடிவந்து பூக்கொத்துக்களை கொடுத்தனர். அவற்றை சிரித்தப்படியே வாங்கிக் கொண்ட மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிகளிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் இந்த நட வடிக்கைகளால் திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தி.மு.க. நிர்வாகிகளுடன் பொதுமக்களும் வரவேற்றதால் உற்சாகம் அடைந்த மு.க.ஸ்டாலின் பெரும்பாலான தெருக்களில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு இடையே திருவாரூர் கீழ சன்னதி வீதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு சிறிது நேரம் அமர்ந்து நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    பின்னர் திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மணக்கால் கிராமத்துக்கு சென்றார். அங்கு பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் மறக்காமல் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார்.

    அங்கு பிரசாரம் முடிந்ததும் திருக்காரவாசல் கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அந்த ஊர் மக்கள் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

    அவர்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்க நட வடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். இதை உடனடியாக கைவிட செய்ய வேண்டும். இந்த திட்டம் வந்தால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்” என்று கூறினார்கள்.

    பொதுமக்கள் சொன்னதை மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    காலை 11 மணிக்கு திருவாரூர்-நாகை புறவழிச் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இதையடுத்து மீண்டும் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை மு.கஸ்டாலின் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சை திலகர் திடலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.  #LokSabhaElections2019 #MKStalin
    Next Story
    ×