search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்சென்னை அல்லது திருச்சியில் குஷ்பு போட்டியிட விருப்பம்
    X

    தென்சென்னை அல்லது திருச்சியில் குஷ்பு போட்டியிட விருப்பம்

    தென்சென்னை கிடைக்காவிட்டால் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு விருப்பம் தெரிவித்துள்ளார். #Kushboo
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டிச்சேரியும் அடங்கும்.

    எனவே தமிழகத்தில் 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் விரும்பும் தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் போட்டியிட போவது யார்? அவர்களுக்கான பின்புலம், பண பலம், சாதி ரீதியான பலம் உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களையம் ஆய்வு செய்து முழு விவரங்களையும் ராகுல்காந்தியிடம் வழங்கி உள்ளனர். அவரும் அந்த பட்டியல் பற்றி தீவிரமாக பரிசீலித்து தமிழக நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார்.

    அந்த பட்டியலை அடிப்படையாக வைத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவினர் நாளை பேச உள்ளார்கள். அப்போது தொகுதிகள் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது பெரும்பாலும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு தொகுதிகள் மட்டும் கூட்டணி கட்சிகளும் கேட்டிருப்பதால் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    எல்லா தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே சென்னையில் தொகுதி ஒதுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    தென்சென்னை கிடைக்காவிட்டால் திருச்சி தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் குஷ்புக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ஒரு காலத்தில் அங்குதான் குஷ்புக்கு ரசிகர்கள் கோவிலும் கட்டினார்கள் என்பது பழைய வரலாறு.

    இது தவிர சிறுபான்மையினர் மற்றும் அனைத்து சமூகத்தினரும் அங்கு கணிசமாக இருப்பதால் அந்த தொகுதியை குஷ்பு விரும்புகிறார்.

    ஆனால் திருச்சி தொகுதியை திருநாவுக்கரசர் கேட்டுள்ளார். அவரது சொந்த தொகுதியான ராமநாதபுரம் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி தொகுதிக்கு ராபர்ட் புரூஸ், ரூபி மனோகரன், டாக்டர் ஆல்பர் மத்தியரசு, ஊர்வசி அமிர்த ராஜ், அசோகன் சாலமன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

    விருதுநகர்-மாணிக்கம் தாகூர், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், தேனி-ஆரூண் அல்லது அவரது மகன் அசன் ஆருண், அரக்கோணம்- நாசே.ராமச்சந்திரன், மயிலாடுதுறை- மணிசங்கர அய்யர், கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார் அல்லது ஹசீனா சையத்.

    ஈரோடு தொகுதியில் போட்டியிட இளங்கோவன் விரும்புகிறார். அதே தொகுதியை ம.தி.மு.க.வும் விரும்புகிறது. ம.தி.மு.க. காஞ்சீபுரத்தை தேர்வு செய்தால் ஈரோட்டில் இளங்கோவன் போட்டியிடுவார் அல்லது திருப்பூரில் இளங்கோவன் போட்டியிடுவார்.

    தனித் தொகுதிகளில் தென்காசி அல்லது திருவள்ளூர் ஒதுக்கப்படுகிறது. தென்காசி ஒதுக்கப்பட்டால் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணியும், திருவள்ளூர் ஒதுக்கப்பட்டால் விக்டரி ஜெயக்குமாரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #Kushboo

    Next Story
    ×