search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் இருந்து கேரளாவுக்கு 2-வது நாளாக பஸ்கள் நிறுத்தம்
    X

    கோவையில் இருந்து கேரளாவுக்கு 2-வது நாளாக பஸ்கள் நிறுத்தம்

    தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    கோவை:

    தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

    இந்த போராட்டத்துக்கு மாநில அரசு ஊழியர்கள், பஸ் தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

    போராட்டம் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் வங்கி சேவை முடங்கியது. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனினும் கோவை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல ஓடியதால் பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரம் கேரளாவில் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமாக இருந்ததால் அங்கிருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கேரளாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 2-வது நாள் போராட்டம் காரணமாக இன்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை ரெயில் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும், தபால் துறை ஊழியர்கள் வெரைட்டி ஹால் ரோட்டில் தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    Next Story
    ×