search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி
    X

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். யாரும் போராட வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரில் தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
     
    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர்.

    இதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector #avoidprotests #Sterliteprotests
    Next Story
    ×