search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலை வைத்து முக ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
    X

    கஜா புயலை வைத்து முக ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    கஜா புயலை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். #OPS #MKStalin #GajaCyclone
    தஞ்சாவூர்:

    தஞ்சையில், கஜா புயலால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் நிவாரண தொகையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் டெல்டா மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி, அதன் பிறகு தானே, வர்தா, ஒக்கி புயல்கள், வெள்ளம் என தொடர்ந்து வந்த இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு இவற்றின் சுவடே இல்லாத வகையில் மாற்றினோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது எப்படி பணியாற்றினாமோ, அதேபோல்தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.

    தஞ்சை மாவட்டத்தில் 2,437 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 592 பேர் 55 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் இருந்த மரங்களை அகற்றி வருவதுடன், போக்குவரத்தையும் சீர் செய்து வருகிறோம்.

    தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 458 மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகரப்பகுதியில் 100 சதவீதமும், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் 83 சதவீதமும், 22 பேரூராட்சிகளில் 96 சதவீதமும் மீதமுள்ள கிராமப்புற பகுதிகளில் 61 சதவீதமும் மின் வினியோகம் வழங்கப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழுமையாக மின்வினியோகம் செய்யப்படும்.

    ‘கஜா’ புயலால் தஞ்சை மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெறப்பட்டு வருகிறது. 1,843 கால்நடைகள், 1 லட்சத்து 58 ஆயிரத்து 458 கோழிகள் உயிரிழந்துள்ளன. 71 ஆயிரத்து 877 குடிசை வீடுகள், 50 ஆயிரத்து 74 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 856 குடிசை வீடுகள் பகுதியாகவும், சேதமடைந்துள்ளன. 127 விசைப்படகுகள், 50 நாட்டுப்படகுகள் முழுமையாகவும், 119 விசைப்படகுகள் மற்றும் 782 நாட்டுப்படகுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.


    கஜா புயலை வைத்து தமிழகத்தில், ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வெறும் வாயால் பேசினால் மட்டும் போதாது, செயல்பட வேண்டும். நாங்கள் தான் களத்தில் கடமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உணவளித்து வருகிறோம். தஞ்சை மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் பட்டினி என்ற பேச்சுக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தஞ்சையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கலெக்டர் அண்ணாதுரை, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  #OPS #MKStalin #GajaCyclone
    Next Story
    ×