search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க. அழகிரி பிரச்சினைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பில்லை - வானதி சீனிவாசன்
    X

    மு.க. அழகிரி பிரச்சினைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பில்லை - வானதி சீனிவாசன்

    தி.மு.க.வில் அழகிரி பிரச்சினைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
    கோவை:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கேரள மக்களுக்கு உதவும் வகையில் பாரதிய ஜனதா சார்பில் நிவாரண பொருட்கள், நிதி சேகரிப்பு நிகழ்ச்சி கோவை ராஜ வீதியில் இன்று தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

    அவரது தலைமையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜ வீதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் கேரள வெள்ள பாதிப்புக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி பெற்றனர்.

    பின்னர் வானதி சினீவாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் இது வரை இல்லாத அளவு கனமழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இது வரை 39 பேர் பலியாகி உள்ளனர்.

    ஏராளமானோர் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கோவையில் பாரதிய ஜனதா சார்பில் வியாபாரிகள், பொது மக்களிடம் நிவாரண பொருட்கள், நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கோவையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள், நிதி உதவி அனுப்பி வைக்கப்படும்.

    சென்னையில் கடும் வெள்ளம் பாதித்த போது பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவினார்கள். தற்போது கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவுவது நமது கடமை.

    கோவையை ஒட்டி உள்ள பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு கோவையில் உள்ள உதவி மையம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கே- கருணாநிதி இறுதி சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள வந்தபோது போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    ப-கருணாநிதி உடலுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த வந்த பின்னர் கூட்டம் அதிகளவு வந்து தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனை போலீசார் உரிய முறையில் கையாண்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    கே-கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்ததின் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே?

    ப- நிச்சயமாக இல்லை.

    கே- தி.மு.க.வில் மு.க.அழகிரி பிரச்சினையில் பாரதிய ஜனதாவுக்கு தொடர்புள்ளதாக பரவலாக கூறப்படுகிறதே?

    ப-தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அதில் பாரதிய ஜனதா இருப்பதாக கூறுகிறார்கள். கமல் கட்சி ஆரம்பித்தாலும் யார் எதை செய்தாலும் எங்களை தான் கூறுகிறார்கள். தி.மு.க.வில் அழகிரி பிரச்சினைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×