search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சி கூட்டணியால் நாட்டில் குழப்பம்தான் அதிகரிக்கும் - பிரதமர் மோடி
    X

    எதிர்க்கட்சி கூட்டணியால் நாட்டில் குழப்பம்தான் அதிகரிக்கும் - பிரதமர் மோடி

    வித்தியாசமான கொள்கைகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியால் நாட்டை குழப்பத்துக்குள் கீழ்நோக்கி தள்ளத்தான் முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #Modi
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி ‘தினத்தந்தி’க்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்தார். ‘தினத்தந்தி’யின் சார்பில் தலைமை செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமார் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் ஆட்சியை வெற்றிகரமாக 4 ஆண்டுகள் முடித்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் தேர்தலை சந்திக்க சென்று கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளை எவ்வாறு கணிக்கிறீர்கள்?

    பதில்:- ஜனநாயகத்தில் எந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் என்றாலும் எப்போதுமே மக்கள்தான் அதுபற்றி தீர்மானிக்க முடியும். தன்னை ஊடுருவிச் செல்லும் ஒளியை 7 வெவ்வேறான நிறங்களாக பிரிக்கும் தன்மையுள்ள முப்பட்டக தேர்தல் கண்ணாடி மூலமாக (பிரிசம்) எதையும் பார்ப்பது எனது இயல்பு அல்ல. தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை தீட்டுவதும் எனது நடைமுறை அல்ல. நாங்கள் அடுத்த தேர்தலை நினைத்து செயல்படுவதும் இல்லை. வரப்போகும் தலைமுறையை மனதில் வைத்தே செயல்படுகிறோம்.

    சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளாலும் மாநிலத்தை அடுத்த மாநிலங்கள், தேர்தலை அடுத்த தேர்தல்கள் என்று நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றி முடிவுகள், மக்கள் தீர்ப்புகள் இந்தியா முழுவதிலும் அவர்கள் எவ்வளவு உயர்ந்த அளவில் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.



    2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி வாய்ப்புகளை பொறுத்தமட்டில், இந்திய மக்கள் வரலாறு காணாத ஒரு அன்பை எங்கள் மீது காட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் நிகழ்த்திய சாதனையைவிட, இன்னும் சிறந்த வெற்றிபெறுவோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ராகுல்காந்தி தன் உரையை முடித்தவுடன் நேரடியாக உங்களிடம் வந்து உங்களை கட்டித்தழுவினார். அப்போது நீங்கள் இருவரும் சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டீர்கள். நீங்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டீர்கள்?

    பதில்:- பெயரையும், புகழையும் தேடி அலைபவர்களுக்கு (நாம்தார்) என தனியாக விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர்கள் தங்கள் விதிகளைத்தான் பின்பற்றுவார்கள். யாரை வெறுப்பது?, எப்போது வெறுப்பது?, எப்படி வெறுப்பை வெளிகாட்டுவது? என்பதையெல்லாம் அவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்வார்கள். அதுபோல, அன்பை வெளிகாட்டுவது, அதற்கு என்ன மாய்மாலம் தேவை என்பதையெல்லாம் அவர்களே முடிவு செய்வார்கள். இதில் எல்லாம் என்னை போன்ற உழைப்பை நம்பியிருக்கும் வேலையாள் (காம்தார்) என்ன சொல்ல முடியும்?.

    கேள்வி:- இதுவரையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியே முன்நிறுத்தப்பட்டு வந்தார். இப்போது திடீரென அதை மாற்றிவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத யாரையும், அதாவது காங்கிரஸ் கட்சி அல்லாத அல்லது மாநில கட்சிகளை சேர்ந்த ஒரு தலைவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று சொல்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட 10 எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களிடையே கூறும்போது, ‘2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டு தலைமையின்கீழ் போட்டியிடும். எங்களது முதல் குறிக்கோள் பா.ஜ.க. அரசாங்கத்தை வெளியே தள்ளுவதுதான்’ என்று கூறியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருக்கின்றன. அவர்களது ஒரே திட்டம் என்னை நீக்குவதுதான். அவர்களிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் இல்லை. அவர்களில் ஏராளமான பேர் பிரதமர் ஆசையில் இருக்கிறார்கள். வித்தியாசமான கொள்கை கொண்டவர்கள். அவர்களிடம் உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லாத மோசமான பின்னணிதான் இருக்கிறது.

    கடந்த காலங்களில் இதுபோன்ற அரசாங்கங்களை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு இயற்கையாக உள்ள முரண்பாடுகளினாலேயே வீழ்ந்துவிட்டார்கள். அவர்களால் நாட்டை குழப்பத்துக்குள் கீழ்நோக்கி தள்ளத்தான் முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த முயன்றிருக்கிறார்கள், சோதித்து இருக்கிறார்கள். ஆனால் நிலையாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாட்டில் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டுவர வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான திட்டம் இருக்கிறது.

    ஒன்றிணைந்து செயல்பட முடியாத வேறுவேறு குணங் கள் கொண்ட எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே உடைய மக்களின் அரசியல் அதிகார வெறியை பூர்த்தி செய்ய இந்திய வாக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்தை கஷ்டத்தில் தள்ளிவிடமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் பக்குவம் கொண்டவர்கள்.



    கேள்வி:- ரபேல் விவகாரம் குறித்து எதையும் வெளிப்படையாக சொல்ல பா.ஜ.க. அரசாங்கம் தயங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- காங்கிரஸ் கட்சியிடம் சொல்வதற்கு என்று எந்த விவகாரமும் இல்லை. தொடர்ந்து திரும்ப திரும்ப எந்தவித ஆதாரமும் இல்லாத உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். விமானப்படையின் திறமையான செயல்பாட்டுக்கு ரபேல் விமானங்கள் மிகவும் முக்கியமானதாகும். இது ஒரு அரசாங்கத்துக்கும், மற்றொரு அரசாங்கத்துக்கும் உள்ள ஒப்பந்தமாகும். இது மிகவும் நேர்மையான, வெளிப்படையான கொள்முதல் ஆகும்.

    கேள்வி:- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

    பதில்:- கடந்த பொதுதேர்தலில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைக்காமல் நாங்கள் ஒரு பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் இது ஒரு சாதாரண சாதனை அல்ல. எங்களுக்கு என்று பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும் சில பகுதிகள் உண்டு. இப்போது அந்த ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயமாக நல்ல வெற்றிகளை காணமுடியும் என்று நான் நம்புகிறேன். தமிழக தேர்தல்களில் கடந்த பல ஆண்டுகளாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகக்குறைவான தேர்வுகளே இருப்பதால், தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்போது மாற்று தேர்வை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    கேள்வி:- ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?

    பதில்:- ‘உங்கள் கேள்வியே தொடங்கினால்’ என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

    கேள்வி:- தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திரும்ப திரும்ப தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்றும், அவர்களின் நடவடிக்கைகளும் கவலையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

    பதில்:- உலகம் முழுவதும் பயங்கரவாத இயக்கங்கள் மனிதகுல மேம்பாட்டையும், வளர்ச்சியையும், நலனையும் அச்சுறுத்திக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது நாட்டில்கூட மாநிலங்களுக்கு தேவையான பல வளர்ச்சித்திட்டங்கள், மாநிலம் வளம்பெறுவதற்கான திட்டங்கள் செயலுக்கு கொண்டுவரப்பட சில குறிப்பிட்ட நோக்கம் கொண்டவர்களால் இடையூறு செய்யப்படுகின்றன என்பதை சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

    இதில் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இதை நான் அல்ல, எனக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கே சில வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிடுகிறது என்று சரியாக கூறியிருக்கிறார். மக்கள் பலனடையும் நல்ல திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த பயங்கரவாத சக்திகளின் தலையீடு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.



    கேள்வி:- சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, அதிக ஊழல்மிக்க மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சொல்லி இருக்கிறார். மாநில அமைச்சர்கள் இதை கோபத்துடன் மறுத்து இருக்கிறார்கள். இதை நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?

    பதில்:- நான் ஏற்கனவே சொல்வதை திரும்ப சொல்கிறேன். மாநில அரசாங்கங்களின் செயல்பாட்டை மதிப்பிடுவது அந்த மாநில மக்களின் உரிமையாகும். நான் மிகவும் உரத்த குரலில் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். எனது அரசாங்கம் ஊழலுக்கு எதிராக போராடுவதில் உறுதி பூண்டிருக்கிறது. ஊழல் எங்கிருந்தாலும் அதை எதிர்த்து போராடவேண்டும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடியதுபோல் இவ்வளவு கடுமையாக போராடியதில்லை.

    1988-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 28 ஆண்டுகள் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த பினாமி பரிமாற்ற தடைசட்டம் இப்போதுதான் வேகப்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பல ஊழல் சக்திகளுக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. தங்கள் பணத்தை மாற்றிக்கொண்டவர்கள்கூட இப்போது அதிக வரியை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போது முதல் எங்கள் நேர்முக வரி வசூல் அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த நாட்டின் நேர்மையான குடிமக்களின் நலனுக்காக ஊழலுக்கு எதிரான எங்கள் போர் தொடரும்.

    கேள்வி:- பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- இந்த பிராந்தியத்தில் அமைதியையும், வளத்தையும் வளர்ப்பதற்காக அண்டை நாடுகளோடு நல்ல உறவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே, என்னுடைய அரசாங்கத்தின் அண்டை நாடுகளுடனான முதல் கொள்கையாகும். இதற்காக எங்கள் ஆட்சி தொடக்கத்தில் இருந்தே அனைவருக்கும் தெரிந்த பல நல்ல முயற்சிகளை எடுத்திருக்கிறோம். சமீபத்தில் கூட நான் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெற்றதற்காக இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறேன். பாகிஸ்தான் இந்த மண்டலத்தை ஒரு பாதுகாப்பான, ஸ்திரமான, வளமான, பயங்கரவாதம், வன்முறை இல்லாத மண்டலமாக மாற்ற பணியாற்றும் என நம்புகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #Modi #ModiSpecialInterview

    Next Story
    ×