search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
    X

    போலீசாரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

    தர்மபுரியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆவேசமடைந்த விவசாயிகள் போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழுவினர் நேற்று தர்மபுரி மாவட்டம் வழியாக சுற்றுப்பயணம் செய்தனர். தர்மபுரி 4-ரோடு அருகே இந்த குழுவினர் பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறிய போலீசார் இருசக்கர வாகன குழுவினரை சாலையின் ஓரத்திற்கு வருமாறு வலியுறுத்தினார்கள்.

    இதுதொடர்பாக ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் போலீசாரை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் குழுவினர் மீண்டும் மோட்டார்சைக்கிள்களில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்கள்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் விவசாயிகள் குழுவினருக்கு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். அங்கும் போலீசாருக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விவசாயிகள் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×