search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை
    X

    கொடைக்கானலில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை

    கொடைக்கானல் அருகே மலை கிராமங்களில் இரவு நேரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மலை கிராமங்களில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள்ளும் விவசாய தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து விடுகின்றன. மேலும் முள் வேலி, சோலார் வேலி அமைத்தாலும் அதனை உடைத்துக் கொண்டு தோட்டங்களில் புகுந்து வாழை, காபி, ஏலக்காய் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதற்காக கிராம மக்கள் இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் மலை பகுதிகளான வஞ்சிநீர்பட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டு அச்சுறுத்தி வருகிறது.

    இந்த யானை வாழை, காய்கறிகள் பயிரிட்டுள்ள தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி சென்றதுடன் குடியிருப்பு பகுதியிலும் பயங்கர சத்தமிட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

    அவர்களும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொட்டியில் நீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கண்காணித்து தண்ணீர் நிரப்பி வன விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×