search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை நிர்மலாதேவியை உடனே கைது செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    பேராசிரியை நிர்மலாதேவியை உடனே கைது செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த சம்பவம் குறித்து பேராசிரியை நிர்மலா தேவியை உடனே கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை-அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியர், சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய உதவிப்பேராசிரியை, சில பெரிய மனிதர்களின் கைப்பாவையாக மாறி, மாணவிகளை சாக்கடையில் தள்ள முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகள் தான் நிர்மலா தேவியால் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித்தருவதுடன், அதிலும் அதிக மதிப்பெண் வாங்கித் தரப்படும்; இதற்கெல்லாம் மேலாக அவர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி ஆசை காட்டுகிறார்.

    அதற்கும் மாணவிகள் உடன்படாத நிலையில், அடுத்த 3 நாட்களில் பதில் கூறும்படியும், இவ்வி‌ஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றும் நிர்மலா தேவி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, ஆளுனருக்கு அருகில் நின்று வீடியோ எடுக்கும் அளவுக்கு தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும், தம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் நிர்மலாதேவி கூறியுள்ளார்.



    அத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்து மாணவிகளை வழிநடத்தியிருக்க வேண்டிய பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்கு பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட வி‌ஷயமாகத் தோன்றவில்லை.

    உயர்கல்வித் துறையில் இத்தகையக் கலாச்சாரம் பரவியிருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்; அப்பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய கல்லூரிகளும், கல்லூரி ஆசிரியைகளும் தங்களின் சுயநலனுக்காக அப்பாவி மாணவிகளை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மன்னிக்கப்படக்கூடாது; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.#tamilnews
    Next Story
    ×