search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்
    X

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

    சென்னையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில் தொடர் மறியல் போராட்டம் இன்று முதல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.

    சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குவிந்தனர்.

    ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, சுப்பிரமணியம், சுரேஷ், மோசஸ் ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


    கோட்டை நோக்கி புறப்பட தயாராக இருந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். தொடர் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    அதனால் சிறிது நேரம் வரை போராட்டக்குழுவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 100 பெண்கள் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு பஸ், வேனில் போலீசார் அழைத்து சென்றனர்.

    மறியல் போராட்டத்தையொட்டி சேப்பாக்கம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. #Tamilnews
    Next Story
    ×