search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாசன மாநிலம் என்ற முறையில் தமிழகத்திற்கே காவிரியில் அதிக உரிமை - முதல்வர் அறிக்கை
    X

    கீழ்ப்பாசன மாநிலம் என்ற முறையில் தமிழகத்திற்கே காவிரியில் அதிக உரிமை - முதல்வர் அறிக்கை

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். #CauveryVerdict #EdappadiPalanisamy
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று இறுதித்தீர்ப்பை அளித்துள்ளது. நடுவர் மன்றம் அளித்த நதிநீர் பங்கீட்டை விட சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருப்பது காவேரி நதிநீர்ப் பிரச்சனை ஆகும். காவேரி நதி கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், கீழ்ப்பாசன மாநிலத்தின் உரிமை என்ற அடிப்படையில், காவேரி நதி நீரின் மீது தமிழ்நாட்டிற்கு அதிக உரிமை உள்ளது.

    சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், காவேரி நதி நீரில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெளிவாக்குகின்றன. இருப்பினும், காவேரி நதிநீர் ஒப்பந்த சரத்துகளை மீறும் வகையில், கர்நாடகம் 1960-களின் பின்பகுதியிலும், 1970-களின் தொடக்கத்திலும், காவேரி நதிநீரில் உரிமை உள்ள மாநிலங்களை கலந்தாலோசிக்காமலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், பல்வேறு அணைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்தது.  

    விவசாய நிலங்களின் பரப்பினையும் கர்நாடகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. 1986-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள காவேரி நதிநீர்ப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, 1956-ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவாச் சட்டத்தின்படி ஒரு நடுவர் மன்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று மத்திய அரசினைக் கேட்டுக் கொண்டது. ஆனால், மத்திய அரசு இக்கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 
     
    காவேரி நதிநீர்ப் பங்கீட்டுப்  பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாடு காவேரி நீர்ப் பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர், உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். இவ்வழக்கில், தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டது. இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், காவேரிப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றத்தை ஏற்படுத்துமாறு உத்தரவு ஒன்றை 1990 ஆம் ஆண்டு பிறப்பித்தது. 

    உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உயிரூட்டப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு, காவேரி நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  
     
    காவேரி நடுவர் மன்றம், 25.6.1991 அன்று ஓர் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. இதில், மேட்டூர் அணைக்கு ஆண்டொன்றுக்கு 205 டிஎம்சி அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என ஆணையிட்டது. மேலும், மாதாந்திர மற்றும் வாராந்திர அடிப்படையில் நீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், இந்த இடைக்கால ஆணை நடைமுறையில் இருக்கும் என்றும், அந்த இடைக்கால ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
       
    இந்த இடைக்கால ஆணைக்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றை கர்நாடக அரசு இயற்றியது. குடியரசுத் தலைவர் அவர்கள், கர்நாடகாவின் அவசர சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை அளிக்கக் கோரினார். இதனை விசாரித்த உச்சநீதி மன்றம், காவேரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால ஆணை செல்லும் என்றும், அது மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்  என்றும், கர்நாடக அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்றும், 22.11.1991 அன்று மத்திய அரசுக்கு கருத்துரை வழங்கியது.  

    இதன் அடிப்படையில், 10.12.1991 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் உறுதியான நடவடிக்கைகளின் காரணமாகவே, இந்த இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது.  

    1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றம் நீண்ட விசாரணைக்கு பின்னர், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. 50 விழுக்காடு நம்பகத்தன்மை என்ற அடிப்படையில், காவேரியின் மொத்த நீர்வளம் 740 டிஎம்சி அடி நீர் என வரையறுத்து, அதனடிப்படையில் காவேரிப் படுகை மாநிலங்களுக்கான நீர் அளவை காவேரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்தது. அதில், தமிழ்நாட்டிற்கு 419 டிஎம்சி அடி நீரூம், கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி அடி நீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி அடி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி அடி நீரும், தவிர்க்க முடியாத உபரி 4 டிஎம்சி அடி நீர் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 10 டிஎம்சி அடி நீர் எனவும், இந்த 740 டிஎம்சி அடி நீரை காவேரி நடுவர் மன்றம் பகிர்ந்தளித்தது.  

    இந்த இறுதி ஆணையை, முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் காவேரி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு முந்தைய அரசு, அதாவது திமுக அரசு, அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் அங்கம் வகித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த உண்மை. 
     
    காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது எடுக்க வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அன்றைய ஆட்சி பொறுப்பில் இருந்த அரசு 19.2.2007 மற்றும் 15.4.2007 ஆகிய நாட்களில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டங்களில், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனை குறித்து தனது ஆளுமையை செலுத்த ஆரம்பித்துவிட்டது என்ற காரணத்தினாலும், பிரச்சனை தீர வேண்டும் என்றால் மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு நலன் கிடைக்க வேண்டுமென்றால், நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றால், அதிக தாமதம் இல்லாமல், உச்ச நீதிமன்றம் செல்வது தான் சிறந்த வழி என்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு உறுதிபட எடுத்துரைக்கப்பட்டது.
      
    காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை எதிர்த்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு தாக்கல் செய்த சிவில் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது விசாரணைக்கு வந்தது. 

    2011 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், 14.6.2011 அன்று அப்போதைய பிரதமர் அவர்களை புதுதில்லியில் சந்தித்து, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், இந்த ஆணையை செயல்படுத்தும் வகையில், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.  இதன் பின்னரும், கடிதங்கள் வாயிலாகவும், கோரிக்கை மனுக்கள் வாயிலாகவும் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து வற்புறுத்திய போதும், மத்திய அரசு, இதற்கு செவி சாய்க்கவில்லை.   
    பின்னர், ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக,  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.  ஜெயலலிதா அவர்களின் இடையறா முயற்சியின்  காரணமாகவே, காவேரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்தும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.  

    மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    மேலும், தமிழ்நாடு விவசாயப் பெருமக்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 

    கர்நாடக அரசு, தன்னிச்சையாக தமிழ்நாட்டின் முன் அனுமதி பெறாமல் கட்ட உத்தேசித்த அணைக்கட்டுகள், இறைவைப் பாசனத் திட்டங்கள் போன்றவை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களின் விவரம்:

    1. கர்நாடகா கோடைக் காலத்தில் பாசனம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என ஆணை வழங்க வேண்டி 21.3.2012 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    2. கர்நாடக அரசு, நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் நீர் வழங்காதது குறித்து 21.7.2012, 17.10.2015 மற்றும் 22.8.2016 ஆகிய நாட்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    3. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி 11.11.2013 அன்று ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

    4. கர்நாடக அரசு நவீனப்படுத்துதல் மற்றும் இறைவைப் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி 11.4.2014 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    5. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என 18.11.2014 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை எதிர்த்து கர்நாடக மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை தாக்கல் செய்தன.  இந்த ஆணையில் தமிழ்நாட்டிற்கு பாதகமாக இருந்த ஒரு சில அம்சங்களின் மீது தமிழ்நாடு அரசு ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்தது. இந்த சிவில் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கத்தக்கவை என்று ஆணை பிறப்பித்த பிறகு, இறுதி கட்ட வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை, 2017 முதல் செப்டம்பர், 2017 வரை நடைபெற்றன.

    தமிழ்நாட்டின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் திறம்பட வாதங்களை எடுத்துரைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பினை ஒத்திவைப்பதாக 20.9.2017 அன்று தெரிவித்தது.
    இன்றைய தினம் (16.2.2018), உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பினை வழங்கியுள்ளது.  

    இத்தீர்ப்பில், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்ற கோரிக்கையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, 1956-ஆம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டம், பிரிவு 6-ஹ ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மத்திய அரசு இன்றைய தினத்திலிருந்து ஆறு வார காலத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

    எந்த காரணத்தைக் கொண்டும் இக்காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாண்புமிகு அம்மாவின் அரசின் நிலைபாட்டிற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செயலாக்கத்திற்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.

    பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் இத்தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது வரவேற்கத்தக்கது.  1892 மற்றும் 1924ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடகாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

    காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டில் காவேரி வடிநிலத்தில் உள்ள பாசனப் பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நீர்ப்பாசன பரப்பு மற்றும் நீர்த்தேவைகளை நடுவர் மன்ற தீர்ப்பின்படியே உச்சநீதிமன்றமும் தனது ஆணையில் உறுதிப்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டில் காவேரி வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன பரப்பை 24.708 லட்சம் ஏக்கரிலிருந்து 21 லட்சமாக குறைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதத்தையும் மற்றும் நீர்த்தேவையை 100 டிஎம்சி அடிக்கு குறைக்க வேண்டும் என்ற வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. தற்போது தமிழ்நாட்டின் காவேரி வடிநிலப் பகுதிகளில் நடுவர் மன்றம் அனுமதித்துள்ள 24.708 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பில் சாகுபடியை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் தேவைக்காக அளிக்கப்பட்டுள்ள 10 டிஎம்சி அடி நீர் அளவு சரியானது என ஏற்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்த ஆணைக்கு ஏதும் பாதகம் இல்லாமல், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, மாதாந்திர வாரியாக 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
        
    காவேரி டெல்டா பகுதியில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் நிலத்தடி நீர் 20 டிஎம்சி அடி உள்ளது என கூறியுள்ளது.  எனினும், நிலத்தடிநீர் காவேரி பாசன உபயோகத்திற்கு கணக்கிட எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது, உச்ச நீதிமன்றம், நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொண்டு பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 192 டிஎம்சி அடி நீரை 177.25 டிஎம்சி அடியாக குறைத்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

    தமிழ்நாட்டின் உரிமைகளையும், வேளாண் பெருமக்களின் நலன்களையும் கண்ணின் மணிபோல எப்போதும் காக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு இறுதி தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும், நமக்குரிய காவேரி நதி நீரினை முழுமையாக பெறவும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.   

    இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CauveryVerdict #EdappadiPalanisamy #TamilNews
    Next Story
    ×