search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனல் மின்நிலையம் அமைக்க தடை கேட்டு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அனல் மின்நிலையம் அமைக்க தடை கேட்டு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு ஜனவரி 8-ந் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 543 ஹெக்டேர் நிலப்பரப்பில் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின்நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த அனல் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை கோரி அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுவில், ‘கால்வாய்களை மூடி அதில் அனல் மின்நிலையம் அமைத்து, விவசாயத்தை அழிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அனல் மின்நிலையம் அமைப்பதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்கவில்லை. எனவே, அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.



    இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வேறு ஒரு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக உப்பூரை சுற்றியுள்ள 58 சிறுகுளங்களில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களை மூடி, அனல் மின்நிலையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துவிடுவோம் என்றும் துப்பாக்கி சூடு நடத்துவோம் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிரட்டி வருகிறார்’ என்றார்.

    இந்த மனுவுக்கு ஜனவரி 8-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×